Saturday, March 12, 2011
இன்று தொகுதி ஒதுக்கீடு... ஷூட்டிங்கை கேன்சல்
அதிமுகவின் ஆரம்ப கால கூட்டணி நண்பரான வைகோவும், அவருக்குப் பின் வந்து கைகோர்த்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத கோபத்திலும் ஏமாற்றத்திலும் கொதித்துக் கொண்டிருக்க, புதுக் கூட்டாளியான நடிகர் விஜய்க்கு இன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.அரசியலுக்கு வருவதே தனது இலக்கு என்பதை கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு நடவடிக்கை மூலம் உணர்த்தி வருகிறார் விஜய்.விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இப்போது விஜய்யின் மக்கள் இயக்கம் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும், இந்த அமைப்புக்கு அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனை விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் உறுதிப்படுத்தினாலும், விஜய் மெளனம் சாதிக்கிறார்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையிலும், விஜய் தரப்புக்கு சீட் கொடுத்து தங்களோடு இருத்திக் கொள்ள ஜெயலலிதா விரும்புவதாகத் தெரிகிறது. கூட்டணியின் ஆரம்பகட்டத்திலிருந்து இருப்பவர்கள், தமக்கு ஆதரவானவர்கள் என்றெல்லாம் ஜெயலலிதா பார்ப்பதில்லை. யாரால் அதிக ஆதாயம் கிடைக்கும் என்பதே அவருக்கு முக்கியம். எனவே வைகோ, கம்யூனிஸ்டுகளை தூக்கியெறியவும் அவர் தயாராகவே உள்ளார்.
இந்நிலையில் விஜயை அழைத்து இன்று அல்லது நாளை ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையிலேயே காத்திருக்கிறார்.
அநேகமாக விஜய்க்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்போது, மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் தங்களின் இறுதி முடிவை எடுத்திருப்பார்கள் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment