Pages

Saturday, March 12, 2011

அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா ?


அ.தி.மு.க. தரப்பிலிருந்து அழைப்பு வராததால் விஜய் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் தன் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டில் நடிகர் விஜய் இன்னும் குழப்பமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியைச் சந்தித்த பின் அவ்வப்போது தன் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார் விஜய். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவரது மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதன் முதலாக அரசியல் பேசினார். அப்போது "ஈழத்தில் தமிழர்களின் உயிர்ப் பலி தடுக்கப்பட அரசியல் மாற்றம் தேவை' என்றார். இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதன் பின் அமைதி காத்து வந்தவர் "வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடப்பு அரசியலை சாடும் வகையில் வசனங்கள் இருந்ததாகவும், ஆனால் சில நிர்பந்தங்கள் காரணமாக சில வசன காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் "வேட்டைக்காரன்' எதிர்பார்த்த வெற்றியை விஜய்க்கு பெற்றுத் தரவில்லை.அதைத் தொடர்ந்து வெளியான "சுறா' படமும் தோல்வியைத் தழுவியது.அதன் பின் கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்திய விஜய் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "பாடிகார்ட்' என்ற படத்தின் ரீமேக்கில் நடித்தார். சித்திக் இயக்கத்தில் "காவலன்' என்ற பெயரில் இந்தப் படம் உருவானது.


இந்த சமயத்தில்தான் விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவுடன் நடந்த இந்த சந்திப்பு அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அதுவே "காவலன்' ரிலீஸýக்கு தடைக் கல்லாகவும் மாறியது.ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு காரணமாக "காவலன்' படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட நாளில் படம் வெளியாகாமல் ஒரு நாள் தள்ளி படம் ரிலீஸôனது.


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தரப்பில் இருந்த பொருளாதார பிரச்னைகள் ரிலீஸ் தாமதமானதற்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டாலும், ஆளும்கட்சிதான் படத்தை வெளியிட முடியாமல் தடை செய்ததாக விஜய் தரப்பு புகார் தெரிவித்தது.இதை தன்னுடைய அடுத்தடுத்த பேட்டிகளில் மறைமுகமாக விஜய் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பு மௌனம் காக்க, விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவானது.


இந்த சூழலில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து அவரது மக்கள் இயக்கம் சார்பில் நாகையில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய விஜய் "தமிழக மீனவனின் மேல் விழும் ஒவ்வோர் அடியையும் என் மேல் விழும் அடியாக நினைத்துப் போராடுவேன்' என்றார். இந்தப் பேச்சு விஜயின் அரசியல் குறித்த பார்வையை இன்னும் தெளிவாக்கியது. ஆனால் அதன் பின் அரசியல் குறித்து பேசாமல் தவிர்த்து வருகிறார் விஜய்.இந்நிலையில், வரும் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் விஜயின் மக்கள் இயக்கத்துக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஜெயலலிதாவும் அவரது மக்கள் இயக்கத்துக்கு தொகுதிகள் ஒதுக்க விரும்புவதாகவும், ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருப்பதால்தான் விஜய் தரப்புக்கு அழைப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயை அழைத்து ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையில் காத்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment