Thursday, February 24, 2011
விஜய் மக்கள் இயக்கம் கண்டன பொதுக்கூட்டம்
அடாத மழை... நாகை காடம்பாடி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள். ஓயாத விசில் சத்தம், கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கொட்டும் மழை... மேடைக்கு இன்னும் வராத விஜய்! இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நேரம் சென்று கொண்டே இருக்க... மழைக்காக இனி ஒதுங்க முடியாது என தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களை காண மேடைக்கு வந்துவிட்டார் விஜய். காதைக் கிழிக்கிறது ஆரவாரங்கள். ரசிகர்களுக்கு கையசைக்கிறார் விஜய்! அடங்காத விசில் சத்தம்... ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறார் விஜய். மேடைக்கு முன்பாக விஜய்யை நோக்கி நகர்கிறார்கள் ரசிகர்கள்... உற்சாகமாகிறார் விஜய்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது... கொட்டும் மழையில் இடி என முழங்கினார் விஜய்.
நாம் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டாமா என்று சொன்னபடியே எடுத்து விட்டார் ஒரு பாட்டு... நான் அடிச்சா தாங்க மாட்ட! நாலு மாசம் தூங்க மாட்ட! மோதிபாரு வீடு போய் சேர மாட்ட! சொல்லவா வேண்டும், விண்ணைப் பிளக்கிறது விசில் சத்தம்!
இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும் என்று தொடர்ந்தது முழக்கம்.
வேலாயுதம் படத்தில் எனக்கு பிடித்தப் பாட்டு இது என்று சொன்ன விஜய், ரத்ததின் ரத்தமே... என்று ரசிகர்களை கைகாட்டி பாடத் துவங்கினார்.
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்று பேச்சை முடித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment