Pages

Thursday, March 24, 2011

திமுகவுக்கு எதிர் நிலைபாட்டை எடுத்தது ஏன்? - புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் நேர்காணல்.


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். நேற்று வந்த ஓர் இளம் இயக்குநரைப்போல ‘சட்டப்படி குற்றம் படத்தில் சுறுசுறுப்பு காட்டுகிறார். விஜய் மக்கள் இயக்கம் இத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்கிற அவர், நாட்டு நடப்பு தனக்கு ஆத்திரத்தைத் தருவதாகச் சொல்கிறார். அவருடன் ஒரு அதிரடியான நேர்காணல்..

தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது?

சினிமாவைத் தாண்டி சமூக உணர்வோடு அது வளர்ந்திருக்கிறது. ஒரு சமூக சிந்தனையோடு, நாட்டுப் பற்றோடு, நாட்டு மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு வளர்ந்திருக்கிறது.

மக்கள் இயக்கத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?

என்னால் கணக்கு சொல்லமுடியாது. 47 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் 20 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மன்றங்களிலும் 50 பேரிலிருந்து 100 பேர்வரை இருக்கிறார்கள். இப்படி மன்றங்களில் இல்லாமல் விஜயை நேசிக்கின்ற பொது மக்கள் இருக்கிறார்களே. ஒவ்வொரு கட்சியிலும் உறுப்பினர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இரு பெரிய கட்சிகள் இருக்கின்றன. ஒரு கோடி அளவில் தான் உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் அந்த அளவில்தான் ஓட்டுகள் விழுகின்றனவா? மீதி ஓட்டெல்லாம் யாருடைய ஓட்டு? பொது மக்களுடைய ஓட்டு. அதுபோல விஜய்க்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. பதிவுசெய்யப்படாத பல மன்றங்கள் குக்கிராமங்களில் இருக்கின்றன. நான் கிராமங்களுக்குச் செல்லும்போது கேட்பேன். போர்டு இருக்கும். பதிவு செய்திருக்கிறாயா? என்று கேட்டால், இல்லை என்பார்கள். இதுமாதிரி ஆர்வமுள்ள இளைஞர்கள் வைத்திருக்கிற மன்றங்கள் 20 ஆயிரம் இருக்கும். அதில்லாமல் விஜயை நேசிக்கும் மக்கள் சதவிகிதமும் இருக்கிறது.

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து விஜய் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

விஜய் உடனே அரசியலுக்கு வரவேண்டும் என்ற மனநிலையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நானோ விஜயோ அவசரப்படவில்லை. எந்தத் துறையில் நாம் காலெடுத்து வைத்தாலும் ஜெயிக்கணும். அதற்கு அஸ்திவாரம் தேவை. அந்த அஸ்திவாரத்தைத்தான் இப்போது போட்டுக்கொண்டு வருகிறோம். அவர்கள் அவசரப்படுகிற அளவுக்கு நாங்கள் அவசரப்படவில்லை. இன்னும் காலம் கனிய வேண்டும். எந்தத் தலைவனாலும் மாற்றத்தை உருவாக்கிட முடியாது. மக்கள் நினைத்தால் முடியும். மக்களிடமிருந்துதான் புரட்சி வெடிக்கவேண்டும். புரட்சி வெடிக்கவேண்டும் என்றால் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வை இப்போது நாங்கள் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம்.

திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்த நீங்கள் அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்களே?

என்றைக்குமே நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை. ஒரு சமூக சீர்திருத்தத்தில் ஆர்வமுள்ள வனாகவே படிக்கிற காலம் முதலே இருந்துவருகிறேன். நான் பெரியாரின் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேரவில்லை. ஆனால் அவருடைய பக்தனாக இருந்தேன். பிறகு அண்ணாவின்மேல் பக்தியாக இருந்தேன். அடுத்து கலைஞரின்மேல் பக்தியாக இருந்தேன். பக்தியாக இருந்தேனே தவிர, எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவோ ஆதரவாளராகவோ இருந்ததில்லை. திமுக வுக்கு ஆதரவாளன் என்று எப்படிச் சொல்கிறீர்கள். ஏதாவது தேர்தலில் போய் பேசியிருக்கிறேனா? அந்த ஒரு மாயையை நீங்கள் மனதில் வைத்திருந்தீர்கள். நட்புமுறையில் அவர் பழகிக்கொண்டிருந்தார். நானும் நட்புமுறையில் பழகிக்கொண்டிருந்தேன். முதல்வராக என்பதைவிட ஒரு கலைஞராக அவர்மீது ஈடுபாடு உண்டு; பக்தி உண்டு. ஆனால் இப்போது எதிரான நிலைப்பாடு என்று என்னால் சொல்லமுடியாது. மொத்தத்தில் நாட்டில் நடக்கும் பல விஷயங்களைக் கண்டு கோபத்தில் இருக்கிறேன். ஒரு தன்மானம் உள்ள தமிழனாக, நாட்டில் நடக்கும் தவறுகளை எல்லாம் தாங்கிக்கொள்ளமுடியாத தமிழனாக கோபமாக இருக்கிறேன். தவறு நடந்தால் தட்டிக்கேட்கவேண்டும். நம்மால் தட்டிக்கேட்க முடியாது. இருந்தாலும் வேதனையாக இருக்கிறது. அந்தக் கோபத்தின் வெளிப்பாட்டில் நான் இருக்கிறேன்.

இருமுறை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள். என்ன பேசினீர்கள்?

என் தனிப்பட்ட விஷயமாக எதையும் பேசவில்லை. ரொம்பப் பேர் சொல்கிறார்கள் விஜய்க்கு பிரச்னை வந்தது. அதற்காகத்தான் சந்திக்கச் சென்றார் என்கிறார்கள். அந்தப் பிரச்னைகளுக்காக அவரைப் போய் பார்க்கவில்லை. எப்போதுமே நான் சுயநலவாதியல்ல. இப்போது சொன்னேன் அல்லவா... அந்தக் கோபத்தை கொட்டிவிட்டு வந்தேன். சமூகத்திலும், மதத்திலும், அரசியலிலும் நடக்கின்ற அநியாயங்களுடைய தாக்கத்தால் எழுந்த கோபத்தை அவர்களிடம் போய் கொட்டிவிட்டு வந்தேன்.

காவலன் படத்திற்குப் பிறகு விஜய் அரசியல் பற்றி பேட்டிகளில் பேசிவருகிறார். எப்போது அவர் நேரடி அரசியலுக்கு வருவார்?

நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் இப்போதைக்கு வரமாட்டார். இப்போதைக்கு என்றால் இந்தத் தேர்தல் நேரத்தில், இந்தக் காலகட்டத்தில் வரமாட்டார். எப்போது வருவார் என்பதைவிட அவர் வருவதற்கு முன்பு ஓர் இயக்கமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

விஜய் மக்கள் இயக்கம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறதா?

இல்லை.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுமா?

நாட்டில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆசைப்படுகிறோம் என்றுகூட சொல்லவில்லை. ஆசைப்படுகிறேன்... அதற்கு என்னாலான சேவைகளைச் செய்வேன். ஒரு மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்திற்கு என்ன செய்யவேண்டுமோ அதை தக்கசமயத்தில் செய்வேன்.

சொந்தப் பிரச்னை காரணமாகத்தான் விஜய் அரசியல் பக்கம் வருகிறார் என்று சொல்கிறார்களே. அதுபற்றி?

அப்படி சொந்தப் பிரச்னைக்காக வருவதாக இருந்தால் இப்போது அரசியலுக்கு வந்திருக்க வேண்டுமே. வரவில்லையே. அதுவே தப்பு என்று தெரிகிறதல்லவா. தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பு வந்தும்கூட நாங்கள் அதை தவிர்த்திருக்கிறோம். நாங்கள் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் சொந்தப் பிரச்னைக்காக போகிறோம்? நாங்கள் சுயநலவாதிகளல்ல.

விஜயகாந்த்தை மக்களிடம் பிரபலப்படுத்திய பல படங்களை இயக்கியுள்ளீர்கள். அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய பிள்ளையோட வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். ஒரு அப்பன் ஸ்தானத்தில் பார்க்கும்போது அது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

சமீபத்திய உங்கள் படமான ‘சட்டப்படி குற்றத்தில் சமகால அரசியல் நடப்புகளை விமர்சித்திருக்கிறீர்களா?

சமகால அரசியல் என்று கேட்டாலே அதுவொரு தவறான கேள்வி. எப்போதுமே நான் அரசியல் பற்றி மட்டுமே அலசுகிறவன் அல்ல. சமூகக் குற்றங்கள்... அதுபற்றி மட்டுமே என் படங்களில் அலசுவேனே தவிர, அரசியல் அதில் ஒரு பங்காக இருக்கும். இது அரசியல் படமல்ல. ஒரு சமூகப் படம். நீதிக்குத் தண்டனை அரசியல் படமா? ஒரு பெண்ணுடைய வாழ்க்கை. சட்டம் ஒரு இருட்டறை அரசியல் படமா? பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கை. நான் சிகப்பு மனிதன் அரசியல் படமா? பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியரின் வாழ்க்கை. சட்டப்படி குற்றம் அரசியல் படமல்ல்ல. பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கதை. அந்த இளைஞர்களை எல்லாம் ஒன்றுதிரட்டிப் போராடக்கூடிய ஒரு கதாபாத்திரத்தைத்தான் சத்யராஜ் செய்கிறார். அந்த இளைஞர்கள் விக்ராந்த், ஹரிஷ், பானு இப்படி. சமூகக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம். சமகாலத்தில் நடந்திருக்கிற எந்தப் பிரச்னையும் குறிப்பாக இருக்காது. பொதுவாக நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றன என்பதுமாதிரி இருக்குமே தவிர, அரசியலில் நடக்கிற அவலங்களை குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை.

சட்டத்தை அடிப்படையாக வைத்து பல படங்களைத் தந்திருக்கிறீர்கள். உங்களுக்கு சட்டத்தின்மீது அதிக ஆர்வம் இருக்கிறதா?

சட்டம் என்பது சாமானிய மக்களுக்கும், பதவியில் இருக்கிறவர்களுக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும் பொதுவான ஒன்று. டாக்டர் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது இந்தச் சட்டம் எல்லோருக்கும் போய்ச்சேரவேண்டும் என¢று நினைத்தார். ஆனால் இந்தச் சட்டம் ஏழைக்கு ஒருவிதமாகவும், பணக்காரனுக்கு ஒருவிதமாகவும் இருக்கிறது. அதைவைத்தே அறிஞர் அண்ணாகூட சொல்லியிருக்கிறார். சட்டம் ஓர் இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் விளக்கு. வக்கீலின் வாதம் சரியில்லை என்றால் சட்டம் ஓர் இருட்டறைதான். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், இரவு 11 மணிக்கு மேலே ஹோட்டலில் டான்ஸ் ஆடக்கூடாது. எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்ற ஒரு விதிமுறை இருக்கிறது. ஒரு அமைச்சரின் மகன் விடிய விடிய ஆடலாம். சாமானியன் 11 மணி வரைக்கும் மட்டுமே ஆடலாம் என்றால் அது தவறல்லவா. இப்படி பலவிதங்களிலும் சட்டங்கள் வசதியுள்ளவனுக்கு வளைந்துகொடுக்கின்றன. வசதி இல்லாதவனை வளைத்துப் பிடிக்கின்றன. அது தவறு என்று எனக்குப படுகிறது. அதை என்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன் இது தொடரும்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment