Thursday, February 17, 2011
மணிரத்னம் படத்தில் இளையராஜா - ரஹ்மான்
இந்தத் தகவலைக் கேட்டபோது நம்ப மறுத்தது மனசு. ஆனால் சொன்னவர் படத்தின் முக்கியமான ஒரு நிர்வாகி என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை...
நடக்கிறதோ இல்லையோ... இப்போது அதற்கான முயற்சிகள் ஒரு முக்கிய கட்டத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவதால் இந்தத் தகவலை காதில் போட்டு வைக்கிறோம்...
தனது பொன்னியின் செல்வன் படத்தில் இசைஞானியையும், இசைப்புயலையும் இணைய வைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம்.
வந்தியத் தேவனாக விஜய், பொன்னியின் செல்வனாக விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின், தலையாய பாத்திரமான ஆதித்த கரிகாலன் வேடத்தில் விஷால் நடிப்பதாக இப்போதைக்கு முடிவாகியுள்ளது. உத்தம சோழன் எனும் பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவைத் தேர்வு செய்து, அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.
நடிகர்களில் இத்தனைப் பேரையும் சந்தித்துப் பேசி, ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்தாலும், கதாநாயகி தேர்வுதான் பெரும் சவாலாக உள்ளதாம்.
இன்னொரு பக்கம் டெக்னிகலாக இந்தப் படம் இந்தியாவின் தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் மணிரத்னம், முதல் கட்டமாக இசைத் துறையின் சிகரங்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானை இந்தப் படத்தில் இணைய வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
பாடல்களுக்கான இசை ஒருவர், பின்னணி இசை மற்றொருவர் என்றில்லாமல், இரண்டையுமே இருவரும் இணைந்து செய்ய வேண்டும் என்று மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இருதரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்பதால், நகம் கடித்தபடி காத்திருக்கிறார் மணிரத்னம்.
இந்த புராஜெக்டில் பெரிய ஆறுதல் ஒன்றுண்டு... அது, படத்துக்கு வசனம் சுஹாஸினி அல்ல.. ஜெயமோகன்!!
Thanks : OneIndia
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment