Saturday, February 5, 2011
தேர்தல் களத்தில் நடிகர் விஜய் ?
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.
இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான "காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் "காவலன்' திரையிடப்பட்டது.
பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து ""அரசியலுக்கு வரும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நேரமும், காலமும், சூழலும் என்னை அந்த இடத்துக்கு அழைக்கும்போது நிச்சயம் என்னை அங்கு வைப்பேன்'' என்றார் விஜய்.
"காவலன்' பட பிரச்னையில் ஏன்? எதற்கு? யார்? என்றே தெரியாமல் இருக்கிறேன். யாரென்று தெரிந்தால் நானே வீதியில் இறங்கிப் போராடவும் தயார் என்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஆளுங்கட்சி தரப்பை மறைமுகமாகச் சாடினார் அவர்.
அப்போதும் தன்னுடயை அரசியல் பிரவேசம் குறித்த தெளிவான கருத்தை விஜய் முன் வைக்கவில்லை.
ஆனால் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளும், விசுவாசிகளும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் நம்முடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும், இதுவே அரசியலுக்கு வருவதற்கு சரியான தருணம் என விஜய்யிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன? அதிமுகவுக்கு விஜய் ஆதரவு உண்டா? விஜய் பிரசாரம் செய்வாரா?
இந்த பின்னணியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment