Pages

Wednesday, February 23, 2011

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்காதது ஏன்? - விஜய்



தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார் நடிகர் விஜய்.


இலங்கை கடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகை, காடம்பாடி திடலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :


தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனை.

கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.

தந்தி அனுப்புங்கள்: கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி (பிப். 23 முதல்) அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.

மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன் என்றார் அவர்.

கூட்டத்துக்கு விஜய் மக்கள் இயக்க கெüரவத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

பிரபாகரன் தாய் மறைவுக்கு அஞ்சலி: நடிகர் விஜய் தனது உரையின் இறுதியில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியம்மாள் மறைவுக்கு ஒரு நிமிடம் மெüன அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, ஒரு நிமிட மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு மேடைக்கு வந்த நடிகர் விஜய், மழை மற்றும் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லாமை, நெறிப்படுத்த முடியாத கூட்டம் ஆகியவற்றால் ஏற்பட்ட கூச்சல், குழப்பம், போலீஸ் தடியடி உள்ளிட்ட காரணங்களால், மாலை 5.58 மணிக்கு மேடையிலிருந்து இறங்கினார்.

பொதுக் கூட்டம் தொடருமா அல்லது நிறைவு பெற்றதா என்ற குழப்பம் நீடித்த நிலையில், இரவு 7.05 மணிக்கு மீண்டும் மேடைக்கு வந்தார். இரவு சுமார் 8 மணிக்குப் பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது.நிதியுதவி... முன்னதாக, இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோர் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும், 7 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளையும் நடிகர் விஜய் வழங்கினார்.

போலீஸ் தடியடி

நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறியதால், போலீஸôர் லேசான தடியடி நடத்தினர்.

இந்தக் கூட்டத்துக்கு 30,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். மாலை 5.45 மணியளவில் நடிகர் விஜய் மேடையில் ஏறினார். அவரைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் பலர் மேடையை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.

அப்போது, ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறி இருக்கைகளையும், தடுப்புக் கட்டைகளையும் உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி வந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீஸôர் லேசான தடியடி நடத்தினர்.

நன்றி:தினமணி
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment